Thozhil Siluvai Nenjil Kolgai Lyrics – தோளில் சிலுவை

தோளில் சிலுவை நெஞ்சில் கொள்கை
சுமந்தே இயேசு போகின்றார்
துணிந்து தேவன் போகின்றார்

1 முதலாம் நிலையில் அரண்மனைதனிலே
நீதியின் வாயில் மூடியதாலே
முள்முடி தரித்து உலகை நினைத்து
அநீத தீர்ப்பை ஏற்றுக்கொண்டாரே.

2 இரண்டாம் நிலையில் பளுவான சிலுவையை
அவனியில் வாழும் அனைவருக்காகவும்
தாமே அணைத்து தோளில் இணைத்து
கொடியதோர் பயணம் ஏற்றுக்கொண்டாரே.

3 மூன்றாம் நிலையில் முதல் முறையாக
முடியா நிலையில் நிலை தடுமாறி
தரையில் விழுந்து மண்ணை முகர்ந்து
எழுந்து நடந்திட ஆற்றல் பெற்றாரே.

4 நான்காம் நிலையில் தளர்வுற்ற மகனை
தாய்மரி கண்டு தேற்றுகின்றாரே
உலகம் விடிந்திட தீமை அழிந்திட
வீரத்தாய் அவள் விடை கொடுத்தாளே.

5 ஐந்தாம் நிலையில் சுமைதனை பகிர்ந்திட
சிரேன் நகரத்து சீமோன் உதவிட
உதவும் பாடத்தை உயர்ந்த வேதத்தை
உலகிற்கு சீமோன் எடுத்துச் சொன்னாரே.

6 ஆறாம் நிலையில் ஆண்டவர் முகத்தை
துடைத்திட விரோணிக்காள் துணிந்து விட்டாரே
பூமியில் பெண்கள் துணிச்சலின் தூண்கள்
என்பதை விரோணிக்காள் உணர்த்தி விட்டாரே.

7 ஏழாம் நிலையில் இரண்டாம் முறையாய்
பூமியில் விழுந்தார் விடியலின் விதையாய்
மண்ணில் விழாமல் மறுபடி எழாமல்
கோதுமை மணியும் பயனளிக்காதே.

8 எட்டாம் நிலையில் எருசலேம் வீதியில்
ஆறுதல் அளித்தனர் கருணையின் மகளிர்
அழுவதை நிறுத்தி அநீதியை எதிர்த்து
குரல் கொடுப்பதுவே ஆறுதல் ஆகும்.

9 ஒன்பதாம் நிலையில் மூன்றாம் முறையாய்
முழு முதல் தலைவன் வீழ்ந்திடலானார்
பாரம் அழுத்த சோகம் வருத்த
லட்சிய தாகத்தால் துடித்தெழுந்தாரே.

10 பத்தாம் நிலையில் அவமான சிகரத்தில்
அணிந்துள்ள ஆடையை அகற்றியதாலே
யாவும் இழந்து தலையை கவிழ்ந்து
லட்சிய ஆடையை உடுத்தி நின்றாரே.

11 பதினொன்றாம் நிலையில் மாசற்ற இயேசுவை
சிலுவையில் அறைந்தனர் தீமையின் ஏவலர்
பாவம் ஒருபுறம் பழியோ மறுபுறம்
இதுதான் உலகின் நடைமுறை பாடம்.

12 பனிரெண்டாம் நிலையில் கள்வரின் நடுவில்
கொடூரமாய் இயேசு உயிர் துறந்தாரே
போராளி இறப்பில் போராட்டம் வலுப்பெறும்
இதுதான் விடியலின் வைகறை கோலம்.

13 பதிமூன்றாம் நிலையில் மரியாவின் மடியில்
மரித்த மகனுக்கு தாலாட்டுப் பாட்டு
தாயின் மடிதான் என்றென்றும் தஞ்சம்
தரணிக்கு முழுவதும் இதுதான் வேதம்.

14 பதினான்காம் நிலையில் கல்லறை தனிலே
இயேசுவின் உடலை அடக்கம் செய்தாரே
கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும்
தொடர்ந்திடும் பயணம் உன்கதை கூறும்.

Spread the love
Related Post
Disqus Comments Loading...